Feb 22, 2011

திரித்துவம் – பரிசுத்த வேதாகமம் என்ன கூறுகிறது?

இறைவன் எண்ணற்ற படைப்புகளில் மிகச்சிறந்த படைப்பினமாக மனித இனத்தைப் படைத்து அவர்களுக்கு வாழ்வியல் முறையை பயிற்றுவிக்க பல தீர்க்கதரிசிகளையும் இறைவன் அனுப்பி வைத்தான். இறைவனின் வேதவாக்கைப் பெற்ற அந்த தீர்க்கதரிசிகள் மனிதர்களுக்கு தேவையான வாழ்வியல் நெறிமுறைகளையும் ஒரே இறைவனை வணங்க வேண்டுமென்ற இறை கட்டளையையும் போதித்து வந்தார்கள். ஒவ்வொரு தீர்க்க தரிசிக்கும் இடையில் மனிதர்கள் வழி தவறும் போதெல்லாம் புதிய தீர்க்கதரிசிகளை இறைவன் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தான். அந்த வகையில் நோவா, ஆப்ரஹாம், பாக்கோபு, ஜோசப், மோஸஸ் போன்ற தீர்க்கதரிசிகளின் வரிசையில் வந்தவர் தான் இயேசு கிறிஸ்து ஆவார்.
இயேசு நாதரின் சீடர்களும் மற்றும் அவரைப் பின்பற்றியவர்களும் அவர் போதித்த தூய ஒர் இறைக் கொள்கையைத் தான் பின்பற்றினர். இவ்வாறு இந்த ஒர் இறைக்கொள்கையே கிறிஸ்தவக் கொள்கையாக மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தது. ஆனால் இயேசு கிறிஸ்து பிறப்பிற்கு 329 ஆண்டுகளுக்கு பிறகே எகிப்து நாட்டின் அலெக்ஸ்ஸாண்டரியா நகரைச் சேர்ந்த அதானாசியஸ் என்பவரால் கிறிஸ்தவர்கள் தற்போது பின்பற்றுகின்ற முக்கடவுள் கொள்கையான திரித்துவக் கொள்கை உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. இந்த திரித்துவக் கொள்கைக்கும் இயேசுநாதர் இறைவனிடமிருந்து பெற்று தன் சீடர்களுக்கு போதித்த உண்மையான கிறிஸ்துவக் கொள்கைக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை.
கிறிஸ்தவ மதத்தில் இந்த திரித்துவக் கொள்கை ஊடுருவியதில் ரோமர்களின் மூடக் கொள்கையைப் பின்பற்றியவர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். இதற்கு உதாரணங்களாகப் பின்வருபவற்றைக் கூறலாம் .
- இயேசு கிறிஸ்துவை பின்பற்றிய கிறிஸ்தவர்களின் புனித வார நாளாகிய சனிக்கிழமையை மாற்றி ஞாயிற்றுக் கிழமையை புனித நாளாக அறிவித்தார்கள்.
- அறியாமைக் கால ரோமர்களின் சூரியக் கடவுளான மித்ராவின் பிறந்த தினமான டிசம்பர் 25 ஆம் தேதியை இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமாக ஆக்கினார்.
உண்மை என்னவென்றால் பைபிளின் ஜெர்மியா 10:2-5, கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரித்து கொண்டாடுவதற்கு தடை விதிக்கிறது. ஆனால் கிறிஸ்துமஸ் மரம் வைத்து கொண்டாடாத கிறிஸ்தவர்களே இல்லை என்று கூறும் அளவிற்கு அனைத்துக் கிறிஸ்தவர்களும் கொண்டாடுகின்றனர்.
“புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள். ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக் கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஜெர்மியா 10:2-5)
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பின்பற்றுகின்ற தற்போதைய கிறிஸ்தவம் இயேசு நாதரின் போதனைகளுக்கு முற்றிலும் புறம்பானது என்பதை நாம் உணரலாம். ஏனென்றால் இயேசு நாதரின் போதனைகளான
  • பன்றியின் மாமிசத்தை உண்ணக் கூடாது
  • அனைவரும் விருத்த சேதனம் செய்ய வேண்டும்
போன்றவைகளை பவுல் அடியார் நீக்கிவிட்டு தமது கருத்தைச் சேர்த்துவிட்டார்.
“இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். (கலாத்தியர் 5:2)
இதுபோல தான் இயேசுவிற்குப் பிறகு வந்தவர்களால் ‘கிறிஸ்தவ மதத்தில் திரித்துவ கொள்கை புகுத்தப்பட்டது’ என்பதை அறிய முடிகிறது. ‘திரித்துவம்’ தான் உண்மையான கிறிஸ்தவம் என்றால் இதை இயேசு நாதர் வலியுறுத்தி போதனை செய்திருக்க வேண்டும்.
மேலும் இதைப் பற்றி பைபிளின் எங்கேயாவது ஒர் இடத்தில் குறிப்பிடபட்டிருக்க வேண்டும். ஆனால் பைபிள் இந்த திரித்துவக் கோட்பாட்டைப் பற்றி ஒன்றுமே கூறாதது மட்டுமல்லாமல் இந்த திரித்துவக் கொள்கைக்கே எதிரான பல வசனங்களைக் கூறுவதை நாம் காணமுடிகிறது. இருப்பினும் உலகின் பெரும்பான்மையான மக்கள் பின்பற்றுகின்ற இந்தக் கொள்கையைத் தக்க வைப்பதற்காக கிறிஸ்தவ மிஷனரிகள் பைபிளிலிருந்து சில வசனங்களை ஆதாரமாகக் கூற முற்படுவர். இந்த சிறிய கட்டுரையில் திரித்துவத்திற்கு ஆதாரமாகக் கூறப்படும் அந்த வசனங்களை நாம் ஆராய்வோம்.
ஆதாரம்-1: -
“[பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது” (I யோவான் 5-7-8)
மேற்கூறப்பட்ட வசனம் கி.பி. 1611 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட ‘கிங் ஜேம்ஸ் வெர்ஸன்’ (King James Version) பதிப்பு பைபிளிலும் அதையொட்டிய பிற மொழிபெயர்ப்புகளில் மட்டுமே காணப்படுகிறது. இந்த வசனமே கிறிஸ்தவர்களின் திரித்துவத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
ஆனால் 1971 ஆம் ஆண்டு வெளியான “ரிவைஸ்டு ஸ்டாண்டர்ட் வெர்ஸன்” (Revised Standard Version) மற்றும் பல பைபிள்களில் மேற்கூறப்பட்ட வசனங்கள் ‘இட்டுக்கட்டப்பட்டு பைபிளில் இடை செறுகப்பட்ட வசனங்கள்’ என்று ஐம்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ அறிஞர்களால் கூறப்பட்டு அந்த வசனங்களை பைபிளிலிருந்து நீக்கிவிட்டனர்.
மேலும் மேற்கூறப்பட்ட I யோவான் 5:7-8 என்ற வசனங்கள் ‘நியூ அமெரிக்கன் ஸ்டான்டர்ட் பைபிள்’ (New American Standard Bible) மற்றும் ‘நியூ வேர்ல்ட் டிரான்ஸ்லேசன் ஆஃப் த ஹோலி ஸ்கிரிப்சர்ஸ்’ (New World Translation of the Holy Scriptures) என்ற பைபிள்களில் வெவ்வேறு விதமாக வருகிறது.
கிறிஸ்தவ அறிஞர்களால் மேற்கூறப்பட்ட வசனங்கள் ‘இட்டுக்கட்டப்பட்டு இடை செறுகப்பட்டவை’ என்று நீக்கிய பின்னரும் சில கிறிஸ்தவ மிஷனரிகள் அதையே ஏன் போதிக்கின்றனர்? பைபிளிலே இல்லாத ஒன்றை இருப்பதாக எப்படி கருத முடியும்? எனவே இந்த வசனங்கள் திரித்துவத்திற்கு சான்றாக இருக்கிறது என்பதை அறிவுடைய எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஆதாரம்-2: -
“ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து” (மத்தேயு 28:19)
இந்த வசனம் பைபிளிலிருந்து நீக்கப்படவில்லையே! திரித்துவத்திற்கு ஆதாரமாக இந்த வசனமும் இருக்கிறதே என்று சிலர் கூறலாம்.
சிந்திக்கின்ற எவரும் இதை ஆதாரமாக ஏற்றுக்கொள்ள இயலாது. ‘மூன்று நபர்கள்’ ஓரிடத்தில் அமர்ந்துக் கொண்டு ஒரு செயலைச் செய்வதாக ஒருவர் கூறினால் ‘அந்த மூன்று நபர்களும்’ எப்படி ‘ஒரு நபராக’ மாறமுடியும்? அது போல் தான் கிறிஸ்தவர்களின் இந்த வாதமும். ‘மூவரின்’ பெயர்களைக் குறிப்பிட்டுவிட்டு அவர்கள் ‘மூவர் அல்ல’! மாறாக ‘ஒருவர்’ என்கின்றனர். எனவே இதுவும் அடிப்படையற்ற ஆதாரம் என்பதை விளங்க முடிகிறது. ‘திரித்துவம்’ என்பது ஒரு ‘மாயை’! ‘கற்பனை’ என்றுணர்ந்த கிறிஸ்தவ மிஷனரிகள் திரித்துவம் குறித்து கேள்வியெழுப்பும் கிறிஸ்தவர்களை எப்படியாவது தங்களின் மதத்திலேயே தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தேடியலைந்து பைபிளில் இருந்து மற்றும் சில ஆதாரங்களைக் கூறமுற்படுவர்.
ஆதாரம்-3: -
நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்” (யோவான் 14:11)
இந்த வசனத்தையும் ஆதாரமாக ஏற்கமுடியாது. ஏனென்றால், கிறிஸ்தவ மிஷனரிகளின் கூற்றுப்படி ஒரு விவாதத்திற்காக இதை ஆதாரமாக ஏற்றுக் கொண்டால், இந்த வசனத்தில் இயேசு நாதர் பிதாவிலும் பிதா இயேசு நாதரிலும் இருப்பதாகக் கூறப்படுவதைப் போல இதே பைபிளின் மற்றுமொரு வசனத்தில் இயேசு நாதரின் சீடர்களும் பிதாவினிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறதே! அப்படியென்றால் தேவன் சீடர்களோடு சேர்த்து பதினைந்து பேர்களில் இருக்கிறாரா?
“அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்” (யோவான் 17:21)
ஆதாரம்-4: -
“அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? (யோவான் 14:9)
மேற்கண்ட வசனத்தில் ‘என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்’ என்று கூறப்பட்டுள்ளதே! அப்படியானால் இயேசுவும் பிதாவும் ஒன்று என்று தானே அர்த்தம் என சிலர் கூறுவர். இந்த வசனங்களின் கருத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் இதற்கு முந்தைய இருவசனங்களைப் படித்துப் பார்த்தால் இந்த வசனத்தின் உண்மையான பொருள் புரியும்.
“பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?” (யோவான் 14:8-9)
அதாவது என் மூலமாகவே நீ பிதாவை அறிந்து கொள்வாய் என்பதே! இயேசுவின் கூறியவற்றின் பொருள் என்பதை அறிந்துக் கொள்ளலாம். ஒரு வாதத்திற்காக கிறிஸ்தவர்கள் கூறுவதை ஏற்றுக் கொண்டால், இது பைபின் மற்ற வசனங்களுக்கு முற்றிலும் முரண்படுவதைக் காணலாம்.
யோவான் 4:24 -ல் ‘தேவன் ஆவியானவர்’ என்றும், யோவான் 5:37 – ல் ‘நீங்கள் ஒருக்காலும் தேவனின் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை’ என்றும் கூறப்பட்டுள்ளதே!
ஆவியானவரான, யாராலும் அவருடைய சத்தத்தைக் கேட்டிராத தேவனை இயேசு நாதரின் காலத்தில் வாழ்ந்தவர்கள் எப்படி பார்த்திருக்க முடியும்? அப்படியென்றால் அவர்கள் பார்த்தது இயேசுவைத் தான் என்பது புலனாகிறதல்லவா? யோவானின் 14:9, ‘என்னைக் கண்டவர் பிதாவைக் கண்டார்’ என்ற வனத்திற்கு நீங்கள் கூறிய பொருளைக் கொண்டால் இந்த வசனங்கள் (யோவான் 4:24 & யோவான் 5:37) முற்றிலும் முரணாக அமைகிறதே!
“என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை” (யோவான் 5:37)
தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்” (யோவான் 4:24)
மேலும் பவுல் அடியார் கூறுவதைப் பாருங்கள்: -
“ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். (I தீமோத்தேயு 6:16)
இதையே இறைவன் தனது இறுதி வேதத்தில் கூறுகிறான்: -
பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்” (அல்-குர்ஆன் 6:103)
பரிசுத்த ஆவி என்பவர் யார்?
திரித்துவத்தைப் புரிந்துக் கொள்வதற்காக பின்வருபவற்றை விளக்குகிறோம். மத்தேயு 1:18 என்ன கூறுகிறது என்று பாருங்கள்: -
“இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது” (மத்தேயு 1:18)
இப்போது லூக்கா 1:26-27 வசனங்களைப் படித்துப் பார்ப்போம்!
“ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். (லூக்கா 1:26-27)
மேற்கண்ட வசனங்களைப் படிக்கும் போது, இயேசு கிறிஸ்துவின் அற்புதப் பிறப்பை பற்றி மத்தேயு கூறும் போது ‘பரிசுத்த ஆவியை’ யும் லூக்கா கூறும் போது ‘காபிரியேலையும்‘ குறிப்பிடுகின்றனர். இதிலிருந்து நாம் விளங்குவது என்னவென்றால் ‘பரிசுத்த ஆவி’ என்று கிறிஸ்தவர்களால் கூறப்படுகின்றவர் தேவ தூதன் ‘காபிரியேல்’ என்பதை அறிய முடிகிறது.
இறைவன் அனுப்பிய தேவ தூதர்கள் (மலக்குகள்) அன்னை மேரியிடம் வந்து அவருக்கு ஓர் ஆண்மகவு பிறக்க இருக்கும் நற்செய்தி கூறிய நிகழ்ச்சியை இறைவனின் இறுதி வேதம் இவ்வாறு கூறுகிறது:-
“(நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள் (Angels),
“மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்’ (என்று கூறினர்) (அல்-குர்ஆன் 3:42)
“மலக்குகள் கூறினார்கள்,
‘மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்; ‘மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.’
(அச்சமயம் மர்யம்) கூறினார்,
‘என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும் போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?’
(அதற்கு) அவன் கூறினான்,
‘அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் ‘ஆகுக’ எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.’ இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான். (அல்-குர்ஆன் 3:45-48)
எனவே எனதருமை கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளே!
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பான்மையான கிறிஸ்தவர்களால் பின்பற்றப்படுகின்ற இந்த திரித்துவம் என்பது இயேசு நாதரால் போதிக்கப்பட்டதன்று! மாறாக இயேசு நாதருக்கு சில நூற்றாண்டுகளுக்குப் பின்வந்தவர்களாலே கிறிஸ்தவத்தில் தோற்றுவிக்க்பட்டது என்பதை மேற்கண்ட சான்றுகளின் மூலம் அறியமுடிகிறது. இவ்வாறு இயேசு நாதர் போதித்த உண்மையான கிறிஸ்தவ மார்க்கம் சிதைவுற்று பவுல் மார்க்கம் உருவான போது அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் அவனது இறுதி தீர்க்கதரிசியை அனுப்பி சத்தியமார்க்கத்தை நிலைநிறுத்தச் செய்தான். அந்த இறுதி தீர்க்கதரிசியான முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இறைவன் அனுப்பிய இறுதி வேதத்தில்,
  • இறைவன் ஒருவனே!
  • அவன் யாரையும் பெறவுமில்லை என்றும்; யாராலும் பெறப்படவும் இல்லை என்றும்,
  • இயேசு நாதர் என்பவர், நோவா, ஆபிரஹாம், மோஸஸ் ஆகியோரின் வரிசையில் வந்த இறைவனின் தீர்க்கதரிசியேயன்றி வேறில்லை என்றும்,
  • கிறிஸ்தவர்கள் கூறுவது போல இறைவன் மூவரில் இருக்கிறான் என்று கூறுவது ஆகாது என்றும், அவ்வாறு கூறியவர் இறைவனை நிராகரித்தவர் போலாவார் என்றும்,
  • நியாயத் தீர்ப்பு நாளில் இறைவனை நிராகரித்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் இருக்கிறது என்றும்,
  • பரிசுத்த ஆவி (ரூஹ் என்னும் ஜிப்ரீல்) என்பவர் இறைவனின் தூதுச் செய்திகளை அவனது தீர்க்கதரிசிகளுக்கு எடுத்துவரும் ஒரு இறை தூதராவார் என்றும்,
  • முஹம்மது நபி (ஸல்) என்பவர் மேற்கூறப்பட்ட தீர்க்கதரிசிகளின் வரிசையில் வந்த இறுதியானவர் என்றும்,
  • முஸ்லிம்கள் என்பவர்கள் மேற்கூறப்பட்ட அனைத்தையும் உண்மை என்று ஏற்றுக் கொண்டவராவார் என்றும்
இறுதி வேதம் கூறுகிறது.
“(நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை” (அல்-குர்ஆன் 112:1-4)